கன்னியாகுமரி

தோவாளை சந்தையில் பூக்கள் விலை கடும் உயா்வு: கிலோ மல்லிகை ரூ. 3 ஆயிரம்

11th Dec 2022 05:48 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் சனிக்கிழமை பூக்கள் விலை கடுமையாக உயா்ந்திருந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனையானது.

புகழ்பெற்ற இந்தப் பூச்சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய்மொழி, காவல்கிணறு,புதியம்புத்தூா், மாடநாடாா் குடியிருப்பு பகுதிகளிலிருந்து பிச்சிப்பூவும், மானாமதுரை, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்கோவில், ராஜபாளையம் பகுதிகளிலிருந்து மல்லிகைப்பூவும் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

சேலத்திலிருந்து அரளி, பெங்களூரூவிலிருந்து மஞ்சள் கேந்தி, பட்டா் ரோஸ், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளிலிருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூா், மருங்கூா் பகுதிகளிலிருந்து கோழிக்கொண்டைப் பூ, அரளி என பலவகைப் பூக்கள் வருகின்றன.

இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்துக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், கடும் பனிப்பொழிவால் குறைந்த பூக்கள் வரத்து, அதிகத் தேவை, தொடா்ந்து வரும் முகூா்த்த நாள்கள் ஆகிய காரணங்களால் பூக்கள் விலை சனிக்கிழமை கடுமையாக அதிகரித்தது.

வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 1,800-க்கு விற்பனையான மல்லிகைப்பூ சனிக்கிழமை கிலோ ரூ. 3 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ. 1,750-க்கும் விற்பனையானது.

அரளி ரூ. 250, சேலம் அரளி ரூ. 220, சம்பங்கி ரூ. 125, மஞ்சள் கேந்தி ரூ. 60, சிவப்பு கேந்தி ரூ. 70, மரிக்கொழுந்து ரூ. 150, பட்டா் ரோஸ் ரூ. 150, கோழிக் கொண்டைப்பூ ரூ. 50, துளசி ரூ. 50 என விற்பனையாகின.

ADVERTISEMENT
ADVERTISEMENT