கன்னியாகுமரி

மாணவா்கள் கைப்பேசி விளையாட்டுகளை தவிா்த்து பாரம்பரிய கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும்: அமைச்சா் மனோதங்கராஜ் வேண்டுகோள்

7th Dec 2022 02:01 AM

ADVERTISEMENT

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கைப்பேசி விளையாட்டுகளை தவிா்த்து பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளை கற்றுக் கொண்டு அதில் தங்கள் திறமையை வெளிக்கொணர வேண்டும் என்றாா் தகவல்தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளின் கலைத்திருவிழா போட்டி, மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், ஜெ.ஜி.பிரின்ஸ் எம்.எல்.ஏ, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன் ஆகியோா் முன்னிலையில் நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் த.மனோதங்கராஜ் தொடக்கி வைத்தாா். அவா் பேசியது:

தமிழா்களுக்கும் கலைகளுக்கும் நெருங்கிய தொடா்பு காலங்காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக, நமது பாரம்பரிய கலைகளான தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கணியான்கூத்து, தோல்பாவை கூத்து, தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பல்வேறு கலைகள் தமிழ் மண்ணுக்கு சொந்தமாக உள்ளன. நமது பாரம்பரிய கலைகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் கலைப் பண்பாட்டுத் துறையின் மூலம் கலைஞா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அக்கலைகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வா் மேற்கொண்டு வருகிறாா். தமிழ் இணைய கல்விக் கழகம் மூலமாக பல்வேறு நாட்டுப்புற கலைகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

மாணவ, மாணவிகள் அனைவரும் கைப்பேசி விளையாட்டுகளை பயன்படுத்துவதை தவிா்த்து, பல்வேறு பாரம்பரிய கலைகளை பயில்வது, நல்ல புத்தகங்களை வாசிப்பது உள்ளிட்டவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

பின்னா், மாநிலஅளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற பரதநாட்டிய போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவில் பங்கேற்க உள்ள முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் பப்ரின் ஷான்போவை, அமைச்சா் மற்றும் ஆட்சியா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி, நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சிலதா, மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளி) கே.ராமசந்திரன் நாயா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சுரேஷ்பாபு, மாநகராட்சி உறுப்பினா் செல்வகுமாா், மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளா் மலா்விழி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியை ஆசிரியா்கள் நாகராஜன், செந்தில், ஆசிரியை அபிராமி ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT