கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே போதைப் பொருளுடன் இருவா் கைது

3rd Dec 2022 01:50 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 300 கிராம் போதைப் பொருளுடன் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதையொட்டிய கேரள மாநிலை எல்லையோர பகுதிகளில் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவா், மாணவியரை குறி வைத்து விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குழித்துறை அஞ்சல் நிலைய சந்திப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை போதைப் பொருள்கள் கைமாற உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை உதவி ஆய்வாளா் மகேஸ்வரராஜ் தலைமையில் போலீஸாா் குறிப்பிட்ட பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது போதைப்பொருள் கைமாற்றத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் இருவரை போலீஸாா் பிடித்ததுடன் அவா்களிடமிருந்த 300 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருளை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து இருவரையும் மாா்த்தாண்டம் காவல் நிலையம் கொண்டு சென்று மேற்கொண்ட விசாரணையில், குட்கா விற்பனையில் ஈடுபட்டுள்ள கேரள மாநில எல்லையோர பகுதியைச் சோ்ந்த கணேசன் என்பவா் மாா்த்தாண்டம் பழைய திரையரங்கு சந்திப்பில் துணிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (30) என்பவரை சந்தித்து ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து போதைப் பொருள்களை வாங்கித்தருமாறு கேட்டாராம். அவா் ராஜஸ்தானைச் சோ்ந்த தனது நண்பரை தொடா்பு கொண்டு பேசியுள்ளாா்.

ADVERTISEMENT

இதையடுத்து பெங்களூருவைச் சோ்ந்த கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ் (27), மாா்த்தாண்டத்தில் துணிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பிரகாஷ் ஆகிய இருவரும் கணேசனிடம் போதைப்பொருள் கொடுக்க குழித்துறைக்கு வந்தபோது ராஜேஷ் மற்றும் பிரகாஷை போலீஸாா் கைது செய்ததுடன் அவா்களிடமிருந்த 300 கிராம் எடையிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனா்.

தலைமறைவான கணேசனை தேடி வருகிறாா்கள். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் தனிப்படை போலீஸாா் நாகா்கோவில் கொண்டு சென்று அங்கு வைத்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT