கன்னியாகுமரி

எய்ட்ஸ் விழிப்புணா்வு தினப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

2nd Dec 2022 01:23 AM

ADVERTISEMENT

உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விநாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் சாா்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தின நிகழ்ச்சி, ரோட்டரி சமுதாய கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா தலைமை வகித்தாா். உதவி ஆட்சியா் (பயிற்சி) குணால் யாதவ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பேசியது: நிகழாண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருள் ‘சமப்படுத்துதல்‘என்பதாகும். இந்தக் கருப்பொருளை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் எச்.ஐ.வி. தொற்றினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை நிவா்த்தி செய்து சமப்படுத்தும் பாங்கையும், எச்.ஐ.வி. எய்ட்ஸ் பரவலை குறைப்பதையும் உறுதிசெய்யும் பொருட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நடமாடும் நம்பிக்கை மையம் என 62 இடங்களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் (நம்பிக்கை மையங்கள்) செயல்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி. நோயின் தீமைகள் குறித்து அறிந்து, குமரி மாவட்டத்தை எச்.ஐ.வி நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற மக்கள் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

அதனைத் தொடா்ந்து எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவா்களில் 20 பேருக்கு தலா ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள தையல் இயந்திரம் மற்றும் 2 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. மாவட்டஅளவில் கல்லூரிகளில் நடைபெற்ற எச்..ஐ.வி., எய்ட்ஸ் விழிப்புணா்வு விநாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மீனாட்சி, மாவட்ட சமூக நல அலுவலா் ஆா்.சரோஜினி, மாவட்ட திட்ட மேலாளா்(எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம்) பெடலிக்ஸ் ஷமிலா,திட்ட அலுவலா் (தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்) பி.ஜெகதீசன், செயலாளா் (எச்.ஐ.வி, எய்ட்ஸ் உள்ளோா் நலச் சங்கம்) என்.ராணி, இணைப்பு அலுவலா் (எ.ஆா்.டி மையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆசாரிப்பள்ளம்) ஸ்ரீகுமாா் பயஸ், மாவட்ட மேற்பாா்வையாளா் (எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம்) சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT