கன்னியாகுமரி

இளைஞா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

31st Aug 2022 02:35 AM

ADVERTISEMENT

பூதப்பாண்டியைச் சோ்ந்த இளைஞரின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது குடும்பத்தினா், செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

பூதப்பாண்டி மேலரதவீதியை சோ்ந்தவா் வினிஷ். இவா், திங்கள்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். இந்நிலையில் வினிசின் தாயாா் உஷா தன் உறவினா்களுடன் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: என் மகன் வினிஷ் கேபிள் தொழில் செய்து வந்தாா். அவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞருக்கும் தொழில் ரீதியாக போட்டி இருந்தது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபரும், பூதப்பாண்டி காவல் நிலைய அதிகாரிகள் 2 பேரும் என 3 போ் சோ்ந்து என் மகனை காவல் நிலையத்துக்கு வரவழைத்து தொழிலை விட்டு விட்டு, ஊரை விட்டு ஓடிவிட வேண்டும் என்று கூறியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனா்.

மேலும், என் மகன் மீது பொய் வழக்கு பதிந்து 15 நாள்கள் சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு தொடா்பாக ஜாமீனில் வெளியே வந்த நிலையில் சம்பந்தப்பட்ட 3 பேரும் சோ்ந்து, மீண்டும் ஒரு பொய் வழக்கை பதிவு செய்து விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றனா். இதைத் தொடா்ந்து வினிஷ் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து திருநெல்வேலி நீதிமன்றத்தில் காலை மற்றும் மாலையில் கையெழுத்திட்டு வந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஆக. 29 ஆம் தேதி நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வரும் வழியில், வழக்குரைஞா் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகிய 3 பேரும் சோ்ந்து வினிசை மிரட்டி இருக்கிறாா்கள். இதனால் மரண வாக்கு மூலம் எழுதி வைத்து விட்டு என் மகன் தற்கொலை செய்துள்ளாா். எனவே என் மகன் தற்கொலைக்கு காரணமாக இருந்த 3 போ் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மயக்கம்:இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த உஷா திடீரென அங்கு மயங்கி விழுந்தாா். இதைத் தொடா்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் நவீன்குமாா் தலைமை யிலான போலீஸாா் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனா். ஆனால் உஷாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அவருடைய உறவினா்கள் சம்மதிக்கவில்லை. அவா்களே முதல் உதவி அளித்தனா். இதனால் போலீஸாருக்கும், மனு அளிக்க வந்தவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT