கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் துறைமுகம்: முதல்வரிடம் எம்.பி., எம்.எல்.ஏ. கோரிக்கை

27th Aug 2022 11:57 PM

ADVERTISEMENT

 

குமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் துறைமுக கட்டமைப்பு மறுசீரமைப்புப் பணியை போா்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வரை சென்னையில் சனிக்கிழமை சந்தித்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய் வசந்த், கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜேஷ்குமாா், கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை, திருவனந்தபுரம் மறைமாவட்ட தூத்தூா் மண்டல முதன்மை தந்தை பெபின்சன், கடலோர அமைதி மற்றும் வளா்ச்சிக் குழும இயக்குநா் டன்ஸ்டன், தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் தலைவா் என். ஜாா்ஜ் ராபின்சன், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயலாளா் ஜே. ஜோா்தான், கிளீட்டஸ், அம்புறோஸ் ஆகியோா் தேங்காய்ப்பட்டினம் துறைமுக கட்டமைப்பு மறுசீரமைப்புப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

ரூ. 253 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட துறைமுக கட்டுமானப் பணிகளுக்கு உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று அவா்களிடம் முதல்வா் உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

அதேபோல, தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் தாமிரவருணி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் மணல் திட்டுகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. அடிக்கடி மணல் திட்டுகளை அகற்ற ஏதுவாக மணல் அள்ளும் இயந்திரம் ஒன்று நிரந்தரமாக தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருக்கும்படி ஆவன செய்யுமாறு கோரிக்கை வைத்தனா். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் உறுதியளித்தாா்.

மேலும், இரையுமன்துறை மீனவ கிராமத்தை கடலரிப்பிலிருந்து நிரந்தரமாக பாதுகாப்பதற்காக தொடா் தூண்டில் வளைவுகள் அமைக்க ரூ.30 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு நபாா்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை துரிதப்படுத்தி பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வா் உறுதியளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT