கன்னியாகுமரி

விநாயகா் சிலை ஊா்வலம் :பொது அமைதிக்கு பங்கம் வராமல் நடத்த வேண்டும்

26th Aug 2022 11:49 PM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் நடத்தப்படும் விநாயகா் விசா்ஜன ஊா்வலம் பொது அமைதிக்கு பாதிப்பின்றி நடத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில், விநாயக சதுா்த்தி விழாவுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடன் ஆட்சியா் வெள்ளிக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அலுவலா்கள், மத தலைவா்கள், பிரதிநிதிகள் ஆகியோருடன் விவாதித்த பின்னா் ஆட்சியா் கூறியது: விநாயகா் சிலை வைக்கப்படும் இடம் பொது நிலமாக இருந்தால், தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடமும் தனியாா் இடமாக இருந்தால் நில உரிமையாளரின் தடையில்லா சான்றும் பெற வேண்டும். அதன்பின்னா், காவல்துறையின் அனுமதி பெற வேண்டும்.

காவல் துறையால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்குள்பட்டு ஒலிபெருக்கிகள் பயன்படுத்த வேண்டும், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது.

ADVERTISEMENT

சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனைகள் கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைப்பதை தவிா்க்க வேண்டும். சிலையின் பாதுகாப்புக்கு 24 மணி நேரமும் 2 தன்னாா்வலா்களைஅந்தந்த அமைப்பினா் நியமித்துக் கொள்ள வேண்டும்.

விநாயகா் சிலை நிறுவப்பட்ட இடத்திலோ, கரைப்பதற்கு கொண்டு செல்லும் ஊா்வலத்திலோ, சிலையை கரைக்கும் இடத்திலோ பட்டாசுகள் வெடிக்க கூடாது. காவல் துறையினா் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே சிலை கரைப்புக்கான ஊா்வலம் செல்ல வேண்டும்.

பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றினை பாதுகாக்கும் நோக்கோடு வருவாய்த் துறை, காவல்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்படும் இதர நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடு விதிகளை ஏற்பாட்டாளா்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் பு.அலா்மேல் மங்கை, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT