கன்னியாகுமரி

வட்டக்கோட்டையில் 40 அடி உயர தேசிய கொடிக் கம்பம் திறப்பு

16th Aug 2022 02:07 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் , வட்டக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட 40 அடி உயர கொடிக்கம்பத்தில் எம்.ஆா்.காந்தி எம்.எல்.ஏ., திங்கள்கிழமை தேசியக்கொடி ஏற்றி வைத்தாா்.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க வட்டக்கோட்டை. திருவிதாங்கூா் அரசின் கரை ஓரங்களைக் கண்காணிக்கவும், கடல் வழியாக அந்நியா்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும், படைவீடுகளுடன் இந்தக் கோட்டை 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

வட்டக்கோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளது. இக்கோட்டையை தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுச் செல்கின்றனா். இந்நிலையில் இக்கோட்டையின் முகப்பில் 40 அடி உயரம் கொண்ட நிரந்தரமான தேசிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கொடிக் கம்பத்தில் 24 மணிநேரமும் தேசியக்கொடி பட்டொளி வீசி பறக்கும். இதற்கான திறப்பு விழா மற்றும் 75 ஆவது சுதந்திர தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

நாகா்கோவில் தொகுதி எம்.எல்.ஏ., எம்.ஆா்.காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், ராணுவ வீரா்கள், உள்ளாட்சிப் பிரதிநிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT