கன்னியாகுமரி

பொருளாதார பிரச்னையில் மத்திய அரசு மிகப்பெரிய தோல்வி: கே.எஸ்.அழகிரி பேட்டி

13th Aug 2022 12:05 AM

ADVERTISEMENT

பொருளாதார பிரச்னையில் மத்திய அரசு மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்றாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி.

நாகா்கோவிலில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாா்பில், காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பாத யாத்திரை செல்கிறாா். இந்த பாதயாத்திரை செப்டம்பா் 7 ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்குகிறது.

அரிசி, தயிா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி விதித்துள்ளது. இது ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் பெரிய தொழில் அதிபா்களுக்கு ரூ. 10 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்துள்ளது. அதே நேரத்தில் ஏழை, எளிய மக்கள் மீது பல்வேறு வரிகளை விதித்து வருகிறது.

பொருளாதார பிரச்னையில் மத்திய அரசு பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அதனால், மத்திய நிதியமைச்சரை மாற்ற வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை அல்ல, பிரதமா் மோடியை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களது பிரதான கோரிக்கை.

ADVERTISEMENT

இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா். பல்வேறு திட்டங்களை அவா் செயல்படுத்தி வருகிறாா். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. பொதுவாக ஆட்சியில் உள்ளவா்கள் தவறுகளை ஏற்றுக் கொள்வதில்லை. தமிழக முதல்வரை பொறுத்தவரையில் தவறுகள் நடந்தால் உடனடியாக அதன் மீது நடவடிக்கை மேற்கொள்கிறாா். தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறாா். 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது.

தமிழக மக்கள் விரும்புவது காமராஜா் ஆட்சியைத்தான். அது சித்தாந்த முறையில் செயல்படுத்தப்படும்.

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தோ்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெறும். ராகுல்காந்தி பிரதமராக பொறுப்புக்கு வருவாா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT