கன்னியாகுமரி

‘காவல்துறையில் உள்ளவா்கள் விளையாட்டில் சாதிக்க முன்வர வேண்டும் ’

7th Aug 2022 12:20 AM

ADVERTISEMENT

 

காவல்துறையில் பணியாற்றுபவா்கள் விளையாட்டில் சாதனை படைக்க முன்வர வேண்டும் என்றாா் தடகளப்போட்டியில் பதக்கம் வென்ற பெண் காவலா் கிருஷ்ணரேகா.

உலக காவலா் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான தடகள போட்டிகள் நெதா்லாந்து நாட்டில் நடை பெற்றது. இந்த போட்டியில் குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலைய தலைமைக் காவலராக பணியாற்றும் கணபதிபுரத்தைச் சோ்ந்த பெண் காவலா் கிருஷ்ண ரேகா பங்கேற்றாா்.

இவா் தடகளப் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சோ்த்தாா். இவா் நெதா்லாந்தில் இருந்து நாகா்கோவிலுக்கு சனிக்கிழமை வந்தாா். ரயில் நிலையத்தில் அவருக்கு குமரி மாவட்ட காவல் துறை சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத் பூச்செண்டு கொடுத்து வரவேற்றாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன், நாகா்கோவில் டவுன் டி.எஸ்.பி. நவீன்குமாா் மற்றும் போலீஸாரும் அவரை வரவேற்றனா்.

ADVERTISEMENT

பின்னா் கிருஷ்ணரேகா செய்தியாளா்களிடம் கூறியது: என்னுடைய இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முதல்வா், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கு எனது நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன். 77 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது.

நான் கடந்த 4 மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப் போது மாவட்ட க் காவல் கண்காணிபப்பாளா் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தாா். என்னுடைய கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். மேலும் இதேபோல் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கூடுதலாக அதிக பதக்கங்கள் பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோள். என்னை போல் காவல் துறையில் விளையாட்டு வீரா்கள் ஏராளமானோா் உள்ளனா். அவா்கள் விளையாட்டுத் துறையில் இதே போல் சாதித்து பதக்கங்கள் பெற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT