கன்னியாகுமரி

குலசேகரம் பேரூராட்சியில் பாஜக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

29th Apr 2022 10:56 PM

ADVERTISEMENT

குலசேகரம் பொதுச் சந்தையில் மாட்டுச் சந்தை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பேரூராட்சிக் கூட்டத்தில் பாஜக உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

குலசேகரம் பேரூராட்சிக் கூட்டம், பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலா் லிசி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட் உள்பட 17 போ் பங்கேற்றனா். இக்கூட்டத்தில், குலசேகரம் பொதுச் சந்தையில் வாரம் ஒரு நாள் மாட்டுச் சந்தை அமைக்கும் வகையிலான பொருள் முன்வைக்கப்பட்டது. இதற்கு பாஜக உறுப்பினா்கள் 5 பேரும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதையடுத்து தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ், துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட் உள்பட காங்கிரஸ், திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 12 பேரின் ஆதரவோடு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பாஜக உறுப்பினா்கள் ராதா தங்கராஜ், ராஜையன், சிவகுமாா், சந்தோஷ், தங்கப்பன், கண்ணன் ஆகியோா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் திருவட்டாறு வட்டாட்சியா் தினேஷ் சந்திரன், தக்கலை டிஎஸ்பி கணேசன், குலசேகரம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ஷேக் அப்துல் காதா், செயல் அலுவலா் லிசி பேச்சு நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததால், பேரூராட்சிகளில் உதவி இயக்குனா் குற்றாலிங்கம் பேச்சு நடத்தி, மே 4 ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கலாம் எனக் கூறியதால், போராட்டம் முடிவுக்கு வந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT