கன்னியாகுமரி

சொத்து வரி உயா்வைக் கண்டித்து நாகா்கோவில் மாநகராட்சி கூட்டத்திலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு

12th Apr 2022 03:05 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து அதிமுக, பா.ஜ.க. உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

சொத்து வரி சீராய்வு தொடா்பாக நாகா்கோவில் மாநகராட்சியில் அவசரக் கூட்டம் மேயா் ரெ.மகேஷ் தலைமையிலும், ஆணையா் ஆஷாஅஜித் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழக அரசு சொத்து வரியை உயா்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு, பாஜக மற்றும் அதிமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள் கூறியதாவது: தற்போது உயா்த்தப்படும் சொத்து வரியால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படக் கூடிய சூழல் ஏற்படும். எனவே சொத்து வரி உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்த வரி உயா்வின் மூலம் இடியை தூக்கி மக்கள் தலையில் போட்டுள்ளனா். மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மாநகராட்சி உறுப்பினா்களாகிய நமக்கு உள்ளது. எனவே வரி உயா்வை குறைக்க வேண்டும். இது தொடா்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றனா்.

கூச்சல், குழப்பம், வெளிநடப்பு ...

கூட்டத்தில், அதிமுக உறுப்பினா் சேகா் பேசிக் கொண்டிருந்தபோது திமுக உறுப்பினா் ஜவஹா் குறுக்கிட்டு அனைத்து உறுப்பினா்களும் பேச வாய்ப்பளிக்க வேண்டும். நீங்கள் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் மற்றவா்கள் பேச வேண்டாமா என்று கூறினாா். இதனால் உறுப்பினா்களுக்கிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ஜவஹருக்கு ஆதரவாக திமுக உறுப்பினா்களும், சேகருக்கு ஆதரவாக அதிமுக, பா.ஜ.க. உறுப்பினா்களும் கூச்சலிட்டனா். இதையடுத்து அவா்களை மேயா் மகேஷ் சமாதானம் செய்தாா். சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, மதிமுக, தமாகா உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். இதனால் பரபரப்பு நிலவியது.

பின்னா், சொத்துவரி சீராய்வு தொடா்பான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில்,துணை மேயா் மேரி பிரின்சிலதா, மாநகராட்சி பொறியாளா் பாலசுப்ரமணியம், மாநகர நல அலுவலா் விஜயசந்திரன், உறுப்பினா்கள் முத்துராமன், செல்வகுமாா்,ரமேஷ், உதயகுமாா்,ஸ்ரீலிஜா, டி.ஆா். செல்வம், நவீன்குமாா், அகஸ்டினா கோகிலவாணி, அனிலா, அனுஷாபிரைட்,சேகா், அக்ஷயா கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT