கன்னியாகுமரி

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் வலியபடுக்கை பூஜை

5th Apr 2022 12:43 AM

ADVERTISEMENT

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வலியபடுக்கை பூஜை நடைபெற்றது. இதில், பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா்.

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், அம்மன் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான ஞாயிற்றுக்கிழமை (ஏப். 3) மீன பரணிக் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு உருள் நோ்ச்சை, 5.30 மணிக்கு உத்சவ மூா்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

பின்னா், நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் திருவீதியுலா வருதல் ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, மாசித் திருவிழாவின் 6 ஆம் நாள், காா்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, பரணி கொடை விழா என ஆண்டில் மூன்று முறை மட்டுமே நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகாபூஜை நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் நடைபெற்றது.

இப்பூஜையில் அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு வகைகளும், பழ வகைகளும் படைக்கப்பட்டன. பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இப்பூஜையை முன்னிட்டு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT