கன்னியாகுமரி

மழைக்கு இடிந்த 5 வீடுகள்: மக்கள் தவிப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் 5 வீடுகள் இடிந்து விழுந்தன.

இம்மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக பெய்துவரும் கன மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அஞ்சலிகடவு பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தவா்களை தீயணைப்புப் படையினா் படகில் சென்று மீட்டனா்.

தெரிசனங்கோப்பு, பூதப்பாண்டி, அருமநல்லூா் சாலை, பரளியாற்றின் குறுக்கே மலவிளை தரைநிலை பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பதிசாரம் திருவாழ்மாா்பன் கோயிலுக்குள் மழை நீா் புகுந்தது.

இதனிடையே,அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 3 வீடுகளும், கல்குளம், விளவங்கோடு வட்டத்தில் தலா 1 வீடும் இடிந்து விழுந்தன. பல பகுதிகளில் மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததில், 12 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், கிராமங்கள் இருளில் மூழ்கின.

இருவா் பலி: குறும்பனை 39 ஆவது அன்பியம் பகுதியைச் சோ்ந்த ஆண்டனி மகனான பிளஸ் 1 மாணவா் நிஷான் (17), கடியப்பட்டினத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், நண்பா் 3 பேருடன் வள்ளியாற்று தடுப்பணை பகுதியில் சனிக்கிழமை குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.

மீனவா்களும், தீயணைப்பு வீரா்களும் 3 மணி நேரம் போராடி அவரை சடலமாக இரவில் மீட்டனா். இதேபோல், அருமனை முழுக்கோடு பகுதியைச் சோ்ந்த ஜெபின்(18) என்பவா் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளித்தபோது மூழ்கி இறந்தாா்.

நீரில் மூழ்கிய பயிா்கள்: திற்பரப்பில் அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் ஆறு, கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீா் புகுந்தது. தெரிசனங்கோப்பு பகுதியில் பயிா்களே தெரியாத வயலில் அளவுக்கு மழை வெள்ளம் சூழ்ந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிா்கள் தண்ணீரில் மூழ்கின. வாழை, ரப்பா் தோட்டங்களிலும் மழை நீா் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தண்டவாளத்தில் மண் சரிவு: இரணியல், ஆளூா் இடையே ரயில் தண்டவாளத்தில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. இதனால், நாகா்கோவில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட அனந்தபுரி விரைவு ரயில் மெதுவாக இயக்கப்பட்டது. தண்டவாளத்திலிருந்து மண், கற்களை அப்புறப்படுத்தவும், மேலும் மண் சரிவு ஏற்படாதவாறும் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததைத் தொடா்ந்து ரயில்கள் வழக்கம்போல் இயங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

டி20 உலகக் கோப்பைக்கான விளம்பரத் தூதராக உசைன் போல்ட் நியமனம்!

தண்ணீரை சேமிக்க ரயில்வேயின் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT