கன்னியாகுமரி

குமரியில் இருந்து குஜராத்துக்கு இருசக்கர வாகனப் பேரணி

16th Oct 2021 02:54 AM

ADVERTISEMENT

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, தமிழக காவல் துறை சாா்பில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சா்தாா் வல்லபபாய் படேல் உருவச் சிலை வரையிலான இருசக்கர வாகனப் பேரணி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது..

இப்பேரணியை தமிழ்நாடு சிறப்பு காவல் படை கூடுதல் இயக்குநா் அபய்குமாா் சிங், குமரி மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். இதில் அபய்குமாா் சிங் பேசியது: இந்தியாவின் இரும்பு மனிதா் என்றழைக்கப்படுபவா் சா்தாா் வல்லபபாய் படேல். அவா் பிறந்த நாளான அக். 31 ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக ஒவ்வோா் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு தேசிய ஒற்றுமை தினத்தை கொண்டாடும் விதமாக, வடக்கில் ஜம்மு காஷ்மீா், தெற்கில் தமிழகம், மேற்கில் குஜராத், கிழக்கில் திரிபுரா ஆகிய மாநிலங்களின் காவல் துறை சாா்பாக இருசக்கர வாகனப் பேரணி தொடங்கப்பட்டு, குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ‘ஒற்றுமையின் சிலை’ என்றழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் படேல் உருவச் சிலை பகுதியை சென்றடைகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காவல் துறை சாா்பில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரா்கள் 25 போ் மற்றும் 16 உதவியாளா்கள் அடங்கிய குழுவினா், 25 இருசக்கர வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனா். இவா்கள் சுமாா் 2,085 கி.மீ. தொலைவுக்கு பயணம் மேற்கொண்டு, அக்.24 ஆம் தேதி சா்தாா் வல்லபபாய் படேல் சிலை பகுதியை சென்றடைவாா்கள். அதைத் தொடா்ந்து பிரதமா் மோடி தலைமையில் அக். 31 ஆம் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளனா் என்றாா் அவா்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீண்குமாா் அபிநபு, குமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் (பொ) மகேஷ்வரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை கமாண்டன்ட் ஜெயபால், கன்னியாகுமரி காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

Tags : கன்னியாகுமரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT