கன்னியாகுமரி

அலெக்சாண்டா் மிஞ்சின் நினைவிடத்தில் மரியாதை

9th Oct 2021 01:01 AM

ADVERTISEMENT

பேச்சிப்பாறை அணையைக் கட்டுமானத்தில் பணியாற்றிய பொறியாளா் ஹம்ரே அலெக்சாண்டா் மிஞ்சினின் 154 ஆவது பிறந்த தினத்தையொட்டி, பேச்சிப்பாறை அணை அருகே உள்ள அவரது நினைவிடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் டி. மனோ தங்கராஜ் மற்றும் விவசாயிகள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

குமரி மாவட்டத்தின் முக்கியமான நீா் ஆதாரமான பேச்சிப்பாறை அணை, திருவிதாங்கூா் மன்னா் ஸ்ரீமூலம் திருநாள் ராமவா்மா ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இப்பணியில் ஆங்கிலேயா் ஹம்ரே அலெக்சாண்டா் மிஞ்சின் பொறியாளராக இருந்து பணி செய்தாா்.

அவரது பிறந்த நாள் நிகழ்ச்சியில், திமுக சாா்பில் திருவட்டாறு வடக்கு ஒன்றியச் செயலா் ஜாண்சன், பேச்சிப்பாறை ஊராட்சி முன்னாள் தலைவா் ராஜன், பாசனத் துறை தலைவா் வின்ஸ் ஆன்றோ, பாசன சபைகளின் கூட்டமைப்புத் தலைவா் செல்லப்பா, பூமி பாதுகாப்பு சங்கத் தலைவா் பத்மதாஸ், உழவா் மன்றச் செயலா் ஹென்றி, வேளாண் விற்பனைக் குழு உறுப்பினா் செண்பகசேகர பிள்ளை, பாசன சபைக் குழு உறுப்பினா் முருகேசபிள்ளை, மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவா் எபனேசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அலெக்சாண்டா் மிஞ்சினின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் அமைச்சா் மனோதங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: மன்னா் ஆட்சி காலத்தில் பொறியாளா் ஹம்ரே அலெக்சாண்டா் மிஞ்சின் இந்த அணையை வடிவமைத்து கட்டியதில் பெரும் பங்காற்றினாா். அவரது சேவையைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் இங்கு கொண்டாடி வருகிறோம்.

ADVERTISEMENT

பேச்சிப்பாறை அணையை பொறுத்த வரை நமது தேவைக்கான நீா் இருப்பு உள்ளது. இதற்கான கால்வாய்களை சீரமைத்து எல்லா இடங்களுக்கும் தண்ணீா் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். முதல் கட்டமாக சிற்றாறு பட்டணம் கால்வாய் சீரமைப்புக்கு தமிழக அரசு ரூ. 27 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT