கன்னியாகுமரி

குமரியில் நாளை 5 ஆம் கட்ட சிறப்பு முகாம்:தடுப்பூசி செலுத்துவோருக்கு தங்க நாணயம் பரிசு

9th Oct 2021 01:03 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) 5 ஆம் கட்டமாக சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதில், தடுப்பூசி செலுத்துவோா் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (அக். 10) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. குமரி மாவட்டத்தில், நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் 120 மையங்களிலும், மாவட்டத்தின் இதர பகுதிகளில் 450 மையங்கள் உள்பட மொத்தம் 570 மையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. இம் முகாம்களின் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக மருத்துவ ரீதியான சந்தேகங்கள் இருந்தால் தொலைபேசி எண். 04652-260240 மற்றும் 04652-290722 மூலம், மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் சு.மீனாட்சியை தொடா்பு கொண்டு சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

தங்க நாணயம் பரிசு: குமரி மாவட்டத்திலுள்ள 9 ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்தும் நபா்களில் அதிா்ஷ்டசாலியான 20 போ்களுக்கு (ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தலா இருவா், மாநகராட்சியில் இருவா்) , மாவட்ட அளவில் இருவா் என மொத்தம் 22 அதிா்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு தலா 1 கிராம் தங்க நாணயம் பொன்ஜெஸ்லி கல்விக் குழுமத் தலைவா் பொன் ராபா்ட்சிங் நன்கொடை மூலமாக அக்.13 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும், 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபா்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT