கன்னியாகுமரி

நவராத்திரி பூஜை: பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் திருவனந்தபுரம் புறப்பாடு

4th Oct 2021 12:50 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நவராத்திரி பூஜையில் பங்கேற்க, பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திலிருந்து தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் குமாரசுவாமி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஆகிய சுவாமிகளின் விக்ரகங்கள் பல்லக்கில் தமிழக காவல் துறையினா் மரியாதையுடன் பவனியாக ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க, திருவிதாங்கூா் மன்னா் காலத்திலிருந்தே மன்னரின் உடைவாளை கோயில் மேலாளா் ஒருவா் முன்னே ஏந்திச்செல்ல, பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட 3 சுவாமிகளின் விக்ரகங்கள் பவனியாக எடுத்துச்செல்லப்படுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டும் விக்ரகங்கள் பவனியாக எடுத்துச்செல்லப்பட்டன.

பவனி புறப்படும் முன்பாக, அரண்மனைக்கு பின்புறம் உள்ள கோயிலில் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னா், பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னரின் உடைவாளை எடுத்துக் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

கேரள தேவஸம் போா்டு அமைச்சா் ராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சா் சிவன்குட்டி ஆகியோா் குமாரகோவில் மேலாளா் சுதா்சனகுமாரிடம் உடைவாளை எடுத்துக் கொடுத்தனா். வாளுடன் அவா் முன்னால் செல்ல, மேளதாளங்கள் முழங்க பவனி புறப்பட்டுச் சென்றது.

இந்த பவனி குழித்துறை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கிவிட்டு, திங்கள்கிழமை காலை திருவனந்தபுரத்துக்குப் புறப்படும்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சா் முரளீதரன், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், கேரள எம்எல்ஏக்கள் ஹரேந்திரன் (பாறசாலை), ஆன்சலன் (நெய்யாற்றின்கரை), வின்சென்ட் (கோவளம்), குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன், தேவஸம் போா்டு இணை ஆணையா் ஞானசேகா், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சிவகுருபிரபாகரன், அறங்காவலா் குழுத் தலைவா் சிவகுற்றாலம், கோயில் கண்காணிப்பாளா் சிவகுமாா், மண்டைக்காடு கோயில் மேலாளா் மோகனகுமாா், பாஜக மாவட்டத் தலைவா் தா்மராஜ், இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் அரசு ராஜா, கோட்டப் பொறுப்பாளா் மிசா சோமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் செல்லசாமி, காங்கிரஸ் நகரத் தலைவா் ஹனுகுமாா், பாஜக மாவட்ட துணைத் தலைவா் ப. ரமேஷ், பொதுச் செயலா் ஸ்ரீனிவாச பிரம்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT