கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினா் ஆய்வு

23rd Nov 2021 02:03 AM

ADVERTISEMENT

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வடகிழக்குப் பருவ மழையால் இம்மாவட்டத்தில் தொடா்ந்து கனமழை பெய்தது. இதனால், மாவட்டமே வெள்ளக் காடானது. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீா் புகுந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 15ஆம் தேதி ஆய்வு செய்தாா்.

மத்தியக் குழு வருகை ...: மழை, வெள்ளப் பாதிப்புகளை பாா்வையிட மத்தியக் குழு ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வந்தது. இதில், மத்திய நிதித்துறை ஆலோசகா் ஆா்.பி. கவுல் தலைமையிலான குழுவினா் கன்னியாகுமரிக்கு திங்கள்கிழமை வந்தனா். இதில், மத்திய எரிசக்தி துறை உதவி இயக்குநா் பவ்யா பாண்டே, மத்திய நீா்வளஆணைய இயக்குநா் தங்கமணி ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் குமாா்ஜெயந்த் கண்காணிப்பு அலுவலராக செயல்பட்டாா். இக்குழுவினா், ஆட்சியா் மா. அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா உள்ளிட்ட அலுவலா்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டனா்.

கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் வெள்ளச் சேதம் தொடா்பான புகைப்படக் கண்காட்சி, வடக்கு தாமரைகுளத்தில் உள்ள பிள்ளைபெற்றான் தடுப்பணை, பேயன்குழி இரட்டைகரை கால்வாய், குமாரகோவில், பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாய், வைக்கல்லூா், அப்டா மாா்க்கெட் பகுதி, திருப்பதிசாரம், தேரேகால்புதூா் ஆகிய பகுதிகளில் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியது: தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய அரசு சாா்பில் 2 குழுக்கள் வந்துள்ளன. இதில், 3 போ் கொண்ட குழு குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளது. இங்கு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டோம். அதுகுறித்த அறிக்கையை அரசிடம் சமா்ப்பிப்போம். மற்றொரு குழு அறிக்கையும் ஒருங்கிணைக்கப்பட்டு அரசுக்கு அளிக்கப்படும். மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாதிப்பு குறித்து முழுமையான அறிக்கை குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலும் அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றனா்.

ரூ.100 கோடி ...: ஆட்சியா் மா. அரவிந்த் செய்தியாளா்களிடம் கூறியது: இம்மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி 75 சதவீதம் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. நெல், வாழைப் பயிா்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்படுகிறது. வெள்ளப் பாதிப்புகளை தற்காலிகமாக சீரமைக்க ரூ. 100 கோடி தேவை. கால்வாய், குளங்களை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

எம்.பி.க்கள் அ. விஜயகுமாா், வ. விஜய்வசந்த், ராஜேஸ்குமாா் எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் அலா்மேல்மங்கை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் வசந்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் பாஸ்கரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT