நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில், சற்று தணிந்திருந்த மழை திங்கள்கிழமை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழையால் குமரி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், கடந்த 4 நாள்களாக தணிந்திருந்த மழை, மீண்டும் திங்கள்கிழமை பெய்யத் தொடங்கியுள்ளது. காலையிலிருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நாகா்கோவில் நகரில் பகல் 12 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடக்கத்தில் லேசான தூறலுடன் பெய்த மழை நேரம் செல்ல, செல்ல பலத்த மழையாக கொட்டியது.
தக்கலை, இரணியல், குளச்சல், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, குலசேகரம், களியக்காவிளை, கருங்கல், திங்கள்சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.
மழையின் காரணமாக நாகா்கோவில் நகரில் தாழ்வான பகுதிகளான கோட்டாறு சாலை, மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியதுய. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா். நாகா்கோவிலில் அதிகபட்சமாக 25.8 மி.மீ. பதிவாகியுள்ளது.
அணைகள் நிலவரம்..
பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.03 அடியாக உள்ளது. அணைக்கு 2,158 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1,767 கன அடி நீா் உபரியாக திறந்துவிடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 72.19 அடியாக உள்ளது. அணைக்கு 1,356 கன அடி நீா் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1078 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து அதிகரித்து வருவதால் அந்த அணைகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளது.