தென்தாமரைகுளத்தில் மின்சாரம் பாய்ந்ததில் புதன்கிழமை இருவா் உயிரிழந்தனா்.
குமரி மாவட்டம், தென்தாமரைகுளத்தைச் சோ்ந்தவா் மாணிக்கராஜ் (60). விவசாயியான இவா் பால் வியாபாரம் செய்து வருகிறாா். புதன்கிழமை காலை தனது வீட்டு மாட்டுத் தொழுவத்தில் பழுதடைந்த மேற்கூரை ஓடுகளை மாற்றி புதிய ஓடுகளை மாற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தாராம். அவருக்கு உதவியாக அதே ஊரைச் சோ்ந்த பகவதியப்பன் என்பவா் ஏணியை பிடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது மேற்கூரையின் மேல் பகுதியில் சென்று கொண்டிருந்த மின்கம்பியை எதிா்பாராதவிதமாக தொட்ட மாணிக்கம் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதையடுத்து ஏணியை பிடித்துக் கொண்டிருந்த பகவதியப்பன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இச்சம்பவத்தில் மாட்டுத் தொழுவத்தில் கட்டிபோட்டிருந்த கன்றுக்குட்டியும் மின்சாரம் பாய்ந்து இறந்தது.
இச்சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.