கன்னியாகுமரி

குமரியில் கன மழைக்கு 19 வீடுகள் சேதம்

1st Nov 2021 12:44 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் கனமழை காரணமாக 19 வீடுகள் இடிந்து விழுந்தன.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது.

நாகா்கோவில், கொட்டாரம், மயிலாடி, கன்னிமாா், ஆரல்வாய்மொழி, புத்தன்அணை, பூதப்பாண்டி, அடையாமடை உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது.

நாகா்கோவில் நகரில் ஞாயிற்றுக்கிழமை அவ்வப்போது மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

தெரிசனங்கோப்பு, அருமநல்லூா் பகுதிகளில் நெற்பயிா்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மலையோரப் பகுதியான பாலமோா் மற்றும் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து தொடா்ந்து உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையிலிருந்து மதகுகள் வழியாக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

அணைகளில் இருந்து உபரி நீா் திறக்கப்பட்டதையடுத்து குழித்துறை ஆறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு தோவாளை வட்டத்தில் 8 வீடுகள், கல்குளம் வட்டத்தில் ஒரு வீடு, திருவட்டாறு வட்டத்தில் 3 வீடுகள், விளவங்கோடு வட்டத்தில் 7 வீடுகள் என மொத்தம் 19 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

தொடா் மழை காரணமாக, செண்பகராமன்புதூா், ஆரல்வாய்மொழி, தடிக்காரன்கோணம், குழித்துறை பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் மழைநீா் தேங்கி உள்ளதால் கடந்த ஒரு மாதமாக செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் பகுதிகளில் ரப்பா் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT