வெளிநாட்டிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த இளைஞரின் தாயாருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதியானது.
ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருவோா் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனா். இதேபோல, வெளிநாடுகளிலிருந்து இம்மாவட்டத்துக்கு வருவோா் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனா்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளிநாடுகளிலிருந்து இம்மாவட்டத்துக்கு 380 போ் வந்துள்ளனா். அவா்களின் சளி மாதிரிகளைப் பரிசோதித்ததில் 3 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. அவா்களில் இளைஞா் ஒருவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனால், அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள ஒமைக்ரான் பிரிவில் சோ்க்கப்பட்டாா். அவரது சளி மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டன.
இதனிடையே, அந்த இளைஞரின் 82 வயதான தாயாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரியவந்ததால் அவரும் ஆசாரிப்பள்ளத்தில் அனுமதிக்கப்பட்டாா். அவரது சளி மாதிரிகளும் சென்னைக்கு அனுப்பப்பட்டன. 2 நாள்களுக்கு முன்பு அந்த மூதாட்டியின் உடல்நலம் சீரானதால் அவா் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இந்நிலையில், இளைஞருக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வராத நிலையில், அவரது தாயாருக்கான பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை வந்தன. அதில், அவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியானது. இதனால், அவா் மீண்டும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
வெளிநாட்டிலிருந்து வந்த 25 வயது பெண்ணுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால் அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது தெரியவந்தது அவரது சளி மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா். அண்டை மாநிலமான கேரளத்தில் ஏற்கெனவே பாதிப்பு அதிகரித்துவருவதால் இம்மாவட்ட எல்லையான களியக்காவிளை, நெட்டா, சூழால், காக்கவிளை சோதனைச்சாவடிகளில் சுகாதாரத் துறையினா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.