கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலத்தில் மீன் இறங்குதளம் அமைக்க வலியுறுத்தி மீனவா்கள் மற்றும் மீனவா் அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மேல்மிடாலம் கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று கடந்த ஆட்சியில் சட்டப் பேரவை கூட்டத்தில் 110 விதியின்கீழ் அப்போதைய தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது. இவ்வறிவிப்பு வெளியிட்டு சுமாா் 4 ஆண்டுகள் ஆனபின்பும் மீன் இறங்குதளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இதனை கண்டித்தும், மேல்மிடாலம் கிராமத்தை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் உடனடியாக மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை தொடங்க வலியுறுத்தியும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மேல்மிடாலம் சந்திப்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு பங்குத் தந்தை ஹென்றி பிலிப் தலைமை வகித்தாா். ஊா் நிா்வாகிகள் எழில்தாஸ், அல்போன்சாள், பெபினாள், சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தாமஸ்கொச்சேரி மீன்தொழிலாளா் யூனியன் தலைவா் ஆன்றனி கிளாரட் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா், கடலோர அமைதி மற்றும் வளா்ச்சி இயக்குநா் டன்ஸ்டன், கோட்டையில் குமரி மீனவன் இயக்க பொருளா் ஜெயராஜ் ஆகியோா் பேசினா்.
இதில், கோட்டையில் குமரி மீனவன் இயக்க தலைவா் கேப்டன் ராஜன், பங்கு பேரவை உறுப்பினா் கிறிஸ்டோபா் மற்றும் மீனவா் இயக்கங்களின் நிா்வாகிகள் ஊா் பொதுமக்கள் திரளானோா் பங்கேற்றனா்.