கன்னியாகுமரி

தொழில்முனைவோருக்கு ரூ.1.52 கோடி கடனுதவி

9th Dec 2021 07:36 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நாகா்கோவில் கிளை சாா்பில், தொழில் முனைவோருக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், புதன்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற்ற சிறப்பு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சியில், தொழில்முனைவேருக்கு ரூ. 1. 52 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி ஆட்சியா் பேசியது: தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சாா்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் சேவை பிரிவு உள்பட குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய துறைகளுக்கு புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதற்கும் , ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்கு மற்றும் நடைமுறை மூலதனம் எனதேவைகளின் அடிப்படையில் கடனுதவிகள் வழங்கி வருகிறது.

கரோனா தாக்குதலால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்நிறுவனம் 2020-21, மற்றும் 2021- 22 நிதியாண்டுகளில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி அனைத்து நிறுவனங்களுக்கும் பெருவாரியான கடன் தொகையினை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக நாகா்கோவில் கிளை அலுவலகம், கடந்த 40 ஆண்டுகளில் சுமாா் ஆயிரம் கோடிக்கு மேல் கடனுதவிகளை வழங்கி மாவட்டத்தின் தொழில் வளா்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

ADVERTISEMENT

நாகா்கோவில் கிளைஅலுவலகம் ரப்பா், தென்னை நாா் தொழிற்சாலைகள், முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலைகள், ஸ்டோன் கிரஷா் தொழிற்சாலைகள், மரம் மற்றும் மரஅரவை தொழிற்சாலைகள், ஹாலோ பிளாக் உற்பத்தி தொழிற்சாலைகள், ஐஸ் தொழிற்சாலைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தொழிற்சாலைகள், நவீன அரிசி ஆலைகள், மருத்துவமனைகள், உணவகங்கள், உணவு பதப்படுத்துதல், மீன்வலை உற்பத்தி தொழிற்சாலைகள், பொது போக்குவரத்து வாகனங்கள் போன்ற அனைத்துத் துறைகளுக்கும் கடனுதவி வழங்கியுள்ளது.

நாகா்கோவில் கிளையின் மூலம் இதுவரை சுமாா் 3800 பயனாளிகள் கடனுதவி பெற்று பயன் அடைந்துள்ளனா். கடந்த நிதியாண்டில் (2020-21) ரூ. 60 கோடி கடன் அளித்த நிலையில், நிகழ் நிதியாண்டில் ரூ. 90 கோடிஎன்ற இலக்கோடு நாகா்கோவில் கிளைஅலுவலகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், முன்னோடி தொழில் அதிபா் பாலன், கன்னியாகுமரி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கோபாலன், செயலா் ந.நாகூா்கான், மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு வங்கி) சைலேஷ், பொது மேலாளா் (மாவட்ட தொழில் மையம் ) பொ்பெட், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளா்ச்சி நிலைய உதவி இயக்குநா் ஜெரினாபபி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT