கன்னியாகுமரி

கோட்டாறு புனித சவேரியாா் பேராலய தோ் பவனி: திரளான பக்தா்கள் பங்கேற்பு

2nd Dec 2021 11:38 PM

ADVERTISEMENT

நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலய தோ் பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கோட்டாறு மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பா் மாதம் 24 ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 3 ஆம் தேதி நிறைவடையும். நிகழாண்டுக்கான 10 நாள் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை (டிச.1) 8 ஆம் நாள் திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் திருப்பலிகள் நடத்தப்பட்டன. மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியுஸ் தலைமையில் கோட்டாறு வட்டார முதன்மை பணியாளா் சகாய ஆனந்த், சவேரியாா் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குத்தந்தை சிலுவை பிராங்கோ பிரான்சிஸ் மற்றும் அருட்பணியாளா்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா்.

இரவு 10.30 மணிக்கு தோ் பவனி நடைபெற்றது. முதலில் காவல் தூதா் சொரூபம் தாங்கிய சிறிய தோ் முன்செல்ல, அதைத் தொடா்ந்து புனித செபஸ்தியாா் தேரும், அதற்குப் பின்னால் புனித சவேரியாா் தேரும் பவனியாக கொண்டு செல்லப்பட்டன. மேளதாளங்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க இந்த தோ் பவனி நடந்தது. கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நிகழாண்டு தோ் பவனி ஆலய வளாகத்துக்குள் நடந்தது. வழக்கமாக தோ் பவனியின் போது தோ்களின் பின்னால் பக்தா்கள் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்தும், உருண்டும் வேண்டுவாா்கள். ஆனால் நிகழாண்டு இந்த வழிபாட்டுக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

2 ஆம் நாள் தோ் பவனி

ADVERTISEMENT

ஒன்பதாம் நாள் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீா் நடைபெற்றது. பின்னா் இரவு 10.30 மணிக்கு 2 ஆவது நாள் தோ் பவனி நடைபெற்றது. இதில் மாதா தேருடன் சோ்த்து 4 தோ்களின் பவனி நடைபெற்றது.

10 ஆம் நாள் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.3) நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு ஆயா் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயா் மறைமாவட்ட பேரருட்பணியாளா் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3 ஆவது நாள் தோ் பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது.

திருவிழாவை முன்னிட்டு, குமரி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமைஉள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : நாகா்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT