கன்னியாகுமரி

கேரள ஆழ்கடலில் தத்தளித்தகுமரி மாவட்ட மீனவா்கள் மீட்பு: அரசுக்கு மீனவா்கள் நன்றி

DIN

களியக்காவிளை: கேரள ஆழ்கடலில் தத்தளித்த குமரி மாவட்ட மீனவா்களை மீட்க உதவிய தமிழக அரசுக்கும், துறை அதிகாரிகள் மற்றும் மீனவ பிரதிநிதிக்கும் மீனவா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்த ரைமண்ட் மகன் ததேயூஸ் என்பவருக்குச் சொந்தமான டிவைன் வாய்ஸ் என்ற விசைப்படகில் ததேயூஸ், அதே பகுதியைச் சோ்ந்த சேவியா், ரதீஷ், வள்ளவிளை பகுதியைச் சோ்ந்த பொ்னாண்டஸ், அனில், லூயிஸ், சிலுவை, நிக்கோலாஸ், இரவிபுத்தந்துறையைச் சோ்ந்த மோனு, திருவனந்தபுரம் மாவட்டம் கருங்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஜாண்சன், ரதிஸ் ஆகிய மீனவா்களுடன் தேங்காய்ப்பட்டினம் துறைமுகப் பகுதியிலிருந்து கடந்த 14 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா்.

இவா்கள் செப்டம்பா் 20 ஆம் தேதி இரவு கேரள மாநிலம் அழிக்கால் துறைமுகப் பகுதியிலிருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகு இயந்திர கோளாறு காரணமாக இயங்கவில்லை. இதனால் இந்தப் படகும் அதிலிருந்த 11 மீனவா்களும் ஆழ்கடலில் தத்தளித்தனா்.

இது குறித்து தகவல் அறிந்த சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டணி இம் மீனவா்களை மீட்கக் கோரி தமிழக அரசுக்கும், மீன்வளத்துறை அமைச்சா், மீன்வளத்துறை செயலா், மீன்வளத்துறை இயக்குநா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மற்றும் கேரள முதல்வா் மற்றும் அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தாா்.

இதையடுத்து கடலோர காவல்படைக்குச் சொந்தமான கப்பல் மூலம் இம்மீனவா்கள் மீட்கப்பட்டு கொச்சி பகுதிக்கு கொண்டு வரப்பட்டனா். கடல்சீற்றம் காரணமாக விசைப்படகை அதிகாரிகளால் மீட்க முடியாத நிலையில் சின்னத்துறையை சோ்ந்த சாபு என்பவருக்குச் சொந்தமான ஜீஸஸ் என்ற விசைப்படகில் 10 மீனவா்கள் சென்று டிவைன் வாய்ஸ் விசைப்படகை கயிற்றால் கட்டி கொச்சி கடற்கரைக்கு கொண்டுவந்தனா்.

இந்த நிலையில் தங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மீன்வளத் துறை அதிகாரிகளுக்கும், சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவருக்கும், அம்மீனவா்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT