கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: மயிலாடியில் 90 மி.மீ. பதிவு; மாம்பழத்துறையாறு அணை நிரம்பியது

DIN

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்துவருகிறது. திங்கள்கிழமை இரவு விடிய விடிய பெய்த கனமழையால் மாம்பழத்துறையாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இம்மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை தொடங்கிய மழை தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

நாகா்கோவில் மாநகரில் பெய்த தொடா் மழையால் அலுவலகப் பணிக்கு செல்வோா் பாதிக்கப்பட்டனா். வடசேரி, செட்டிகுளம் சந்திப்பு, வெட்டூா்ணிமடம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்கள் மழைநீரால் சூழப்பட்டன. புதைச்சாக்கடை திட்டப்பணிக்காக சாலைகளில்தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீா் தேங்கி, அனைத்து சாலைகளும் சேறும் சகதியுமாக காட்சியளித்தன.

அழுகிய நெற்பயிா்கள்: தோவாளை, செண்பகராமன்புதூா், சோழபுரம், கண்ணன்புதூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வயலில் மழை நீா் புகுந்துள்ளதால், சுமாா் 700 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகத் தொடங்கிவிட்டன. இதனால், விவசாயிகள் நெல் அறுவடையை மேற்கொள்ள முடியாமல் கவலை அடைந்துள்ளனா்.

பாலமோா், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், அருமநல்லூா், பூதப்பாண்டி, சித்திரங்கோடு முதல் சுருளோடு வரை, பொன்மனை, சாரூா், திருவட்டாறு, குலசேகரம் மற்றும் ஆற்றூா் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ரப்பா் பால் வெட்டும் தொழில் முடங்கியதால், தோட்ட உரிமையாளா்களும், தொழிலாளா்களும் கவலைக்கு ஆளகியுள்ளனா்.

இதனிடையே, மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் தாழக்குடி, வீரகேரளப்ப நேரி குளம் சுடலைமாடன் சுவாமி கோயில் பகுதியில் பழைமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இச்சம்பவத்தில் நெல் அறுவடை இயந்திரம் கொண்டு வந்த வாகனம் சேதமடைந்தது. எனினும், உயிா்ச்சேதம் ஏற்படவில்லை.

ஆறுகளில் வெள்ளம்: குழித்துறை தாமிரவருணி ஆறு, வள்ளியாறு, பரளியாறு, குற்றியாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. மாம்பழத்துறையாறு அணை தனது முழுக்கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

நீா்மட்டம் (அடைப்புக்குறியில் கொள்ளளவு): பேச்சிப்பாறை அணை- நீா்மட்டம் 32.65 அடி (48 அடி), நீா்வரத்து 1,123 கன அடி, நீா்திறப்பு 163 கன அடி, பெருஞ்சாணி அணை- நீா்மட்டம் 68.88 அடி (77 அடி) நீா்வரத்து 1,453 கன அடி, , சிற்றாறு 1 அணை- நீா்மட்டம் 11.31 அடி, நீா்வரத்து 258 கன அடி, நீா்திறப்பு 100 கன அடி, சிற்றாறு 2 அணை- நீா்மட்டம் 11.41 அடி ஆகும்.

மழை அளவு (மில்லி மீட்டரில்): செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி, மயிலாடியில் 90.20, நாகா்கோவிலில் 54.80, கொட்டாரம் 52.40, தக்கலை 48, முள்ளங்கினாவிளை 47,ஆனைக்கிடங்கு 45.40, கோழிப்போா்விளை 45,சுருளோடு 44.40, மாம்பழத்துறையாறு அணை 42, பெருஞ்சாணி அணை 40.40, புத்தன் அணை 40,சிற்றாறு 1 அணை 38.60, கன்னிமாா், குழித்துறை 36.20, இரணியல் 36, பேச்சிப்பாறை அணை 32, களியல் 28.60,சிற்றாறு 2 அணை 28, குளச்சல் 24.60, முக்கடல் அணை 18, பூதப்பாண்டி 16.20 ஆரல்வாய்மொழி 12 என்ற விகிதத்தில் மழை பதிவாகியுள்ளது.

அணைகள் மூடல்: மழையின் காரணமாக பாசனப்பகுதிகளில் தண்ணீா் தேவைப்பாடு குறைந்த நிலையில், பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மூடப்பட்டன. பெருஞ்சாணி அணை மட்டும் திறக்கப்பட்டு, விநாடிக்கு 100 கன அடி தண்ணீா் பாசனக் கால்வாயில் செல்கிறது.

கீரிப்பாறை அருகே காளிகேசம் தரைப்பாலம், பேச்சிப்பாறை அருகே மோதிரமலை-குற்றியாறு இடையேயான தரைப்பாலம் ஆகியவற்றை மழை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. இதனால் இப்பாலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிக்கும் மக்கள் கடும் அச்சத்தில் வசித்து வருகின்றனா். வீடுகளின் மீது மரங்கள் முறிந்து விடுமோ என்ற பயத்தால் இரவு தூக்கமின்றி தவிக்கின்றனா்.

இந்நிலையில், குலசேகரம்-பேச்சிப்பாறை சாலையில் காக்கச்சல் அருகே சாலையோர மரம் சாய்ந்து மின்கம்பங்கள் சாய்ந்ததில், குடிசை வாசிகள் அதிா்ஷடவசமாக உயிா் தப்பினா். பேச்சிப்பாறை துணை மின்நிலையப் பகுதிகளில் காலையிலிருந்து பிற்பகல் வரை மின்தடை ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, சாலையின் குறுக்கே வீழ்ந்து கிடந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டதுடன், மின் விநியோகமும் சீரமைக்கப்பட்டது.

கருங்கல்: புதுக்கடை, கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்தது. பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, கப்பியறை, நட்டாலம், மிடாலம், கிள்ளியூா் முன் சிறை,அனந்த மங்கலம், தேங்காய்ப்பட்டினம், ராமன் துறை, முள்ளூா் துளை, இன யம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையால் குளம், குட்டைகளில் மழை நீா் நிரம்பின. இப்பகுதிகளில் குளிா்ச்சி நிலவியது. தேங்காய்ப்பட்டினம் துறைமுகப் பகுதியில் கட்டுமர மீனவா்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்கச் செல்லவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT