கன்னியாகுமரி

நவராத்திரிக்கு திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்ரகங்கள் திரும்பின

29th Oct 2020 12:30 PM

ADVERTISEMENT

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜைக்கு சென்ற குமரி மாவட்ட சுவாமி விக்ரகங்கள் வியாழக்கிழமை காலையில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு வந்தது.

திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனை பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, ஆண்டுதோறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரத்திலிருந்து சரஸ்வதி அம்மன் சிலையும், சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் மற்றும் குமாரகோவில் குமாரசுவாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அங்கு பூஜையில் வைக்கப்பட்டு நவராத்திரி பூஜைகள் நிறைவுபெற்ற பின் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரும் வழக்கம் மன்னர் ஆட்சி காலம் முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்பர் பூஜித்ததாகக் கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமி விக்ரகங்கள் பல்லக்குகளில் பத்மநாபபுரத்திலிருந்து அக். 14 ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு பவனியாக கொண்டுவரப்பட்டது. 

சுவாமி விக்ரகங்களுக்கு முன்னால், மன்னர் பயன்படுத்திய உடைவாள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து அக். 15 ஆம் தேதி களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் சுவாமி விக்ரகங்களுக்கு துப்பாக்கிய ஏந்திய கேரள காவல்துறையின் அணிவகுப்புடன், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து நவராத்திரி பூஜைகள் நிறைவுபெற்றதையடுத்து அங்கிருந்து புதன்கிழமை திரும்பிய சுவாமி சிலைகள் அன்றிரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலில் இரவு தங்கலுக்குப் பின் வியாழக்கிழமை காலையில் அங்கிருந்து திரும்பியது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக வழிநெடுகிலும் பக்தர்கள் தட்டுப்பூஜை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து காலை 8.10 மணியளவில் சுவாமி விக்ரகங்கள் களியக்காவிளைக்கு வந்தது. நெய்யாற்றின்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அனில்குமார் தலைமையில் கேரள காவல்துறையினர் மற்றும் தேவஸ்வம்போர்டு அதிகாரிகள், திருவிதாங்கூர் நவராத்திரி விழாக்குழு அறக்கட்டளை தலைவர் ஜி. மாணிக்கம், செயலர் எஸ்.ஆர். ரமேஷ், ராஜசேகரன்நாயர், கேரள ஐயப்ப சேவா சங்க தலைவர் அசோகன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.  தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய கேரள, தமிழக காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்திய பின் சுவாமி ஊர்வல பொறுப்பை கேரள அதிகாரிகள் கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணியிடம் ஒப்படைத்தனர். 

ADVERTISEMENT

தொடர்ந்து வியாழக்கிழமை குழித்துறை மகாதேவர் கோவிலில் இரவு தங்கலுக்குப் பின் சுவாமி விக்ரகங்கள் வெள்ளிக்கிழமை பத்மநாபபுரம் சென்று அங்கிருந்து முன்னுதித்தநங்கை அம்மன் சுசீந்திரம் கோயிலுக்கும், குமாரசுவாமி வேளிமலை கோயிலுக்கும் செல்கிறார்கள்.
 

Tags : kanniyakumari
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT