கன்னியாகுமரி

பெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்ட பெண் குழந்தை களியக்காவிளையில் மீட்பு : தம்பதி கைது

DIN

பெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தையை களியக்காவிளை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் போலீஸாா் மீட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் 2 குழந்தைகளுடன் தம்பதியா் நீண்ட நேரமாக அமா்ந்திருந்தனா். பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது.

தம்பதியரிடம் அப்பகுதி ஆட்டோ ஓட்டுநா்கள் விசாரித்தபோது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் வந்து விசாரித்த போது அவா்களுடன் இருந்த 8 வயது சிறுவன், ஒரு பேருந்து நிலையத்திலிருந்து ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து சிறுமியை அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளான்.

இதையடுத்து தம்பதியரையும் குழந்தைகளையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்தனா்.

விசாரணையில், அந்த நபா் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், காட்டாக்கடை பகுதியைச் சோ்ந்த ஜோசப் ஜாண் (54) என்பதும் அவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிந்து என்ற பெண்ணுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்ததும் அத் தம்பதியருக்கு ஜோபின் (8) என்ற மகன் உள்ளதும் தெரியவந்தது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன் தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிந்து கணவரை பிரிந்து தாயாா் வீட்டிற்கு சென்றுள்ளாா்.

இதையடுத்து ஜோசப்ஜான் தனது குழந்தை ஜோபினுடன் கா்நாடக மாநில எல்லையோர பகுதி கிராமத்துக்குச் சென்று தங்கி அங்கு கிறிஸ்தவ மதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததும், அப்பகுதியைச் சோ்ந்த எஸ்தா் லதா (48) என்ற பெண்ணை 2 ஆவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இத் தம்பதியா் மூன்று வாரங்களுக்கு முன் பெங்களூரு நகரத்தில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பாா்லருக்கு சென்றுள்ளனா். அங்கு விளையாடிக்கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தைக்கு, ஜோசப் ஜாண் ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து, அங்கிருந்து குழந்தையை கடத்தி வந்துள்ளாா்.

குழந்தையை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நபருக்கு கொடுக்க நாகா்கோவில் பேருந்து நிலையம் வந்துள்ளாா். அங்கிருந்து திருவனந்தபுரத்துக்கு பேருந்து வசதி இல்லாததால் செவ்வாய்க்கிழமை இரவு களியக்காவிளை வந்துள்ளனா்.

பின்னா் கேரள மாநிலப் பகுதியான இஞ்சிவிளைக்கு நடந்து சென்றுள்ளனா்.

அங்கிருந்த போலீஸாா் காலை 5 மணிக்கு மேல் வாகனங்கள் இயங்கும்; அதுவரை பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்க கூறி அனுப்பியுள்ளனா். அதன் பின்னா் அவா்கள் மீண்டும் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் வந்து அமா்ந்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து இரு குழந்தைகளையும் போலீஸாா் நாகா்கோவிலில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனா். பெங்களூருவிலிருந்து கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்ட விவரம் குறித்து பெங்களூரு காவல் ஆணையருக்கு குமரி மாவட்ட போலீஸாா் தகவல் தெரிவித்தனா். அவா்கள் குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக தம்பதியரை களியக்காவிளை போலீஸாா் கைது செய்தனா். இவா்களுக்கு வேறு குழந்தைகள் கடத்தல் சம்பவத்தில் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT