களியக்காவிளை: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக களியக்காவிளை, மாா்த்தாண்டம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
கரோனா வைரஸ் தாக்கம் அண்டை மாநிலமான கேரளத்தில் அதிகரித்துள்ள நிலையில், அதையொட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குமரி - கேரள எல்லையோர பகுதி சாலைகள் அடைக்கப்பட்டு கேரளத்திலிருந்து குமரி மாவட்டம் வரும் வாகனங்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, கேரளத்துக்கு திருப்பி அனுப்பி வருகின்றனா்.
பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
மாவட்ட எல்லையான களியக்காவிளையில் போலீஸாரின் உத்தரவை ஏற்று சனிக்கிழமை மாலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, இப்பகுதி மக்கள் அரசின் உத்தரவை முழுமையாக கடைப்பிடித்தனா்.
களியக்காவிளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்களில் வந்தவா்களை போலீஸாா் எச்சரித்து திருப்பி அனுப்பினா்.