கன்னியாகுமரி

கடலில் மீன்பிடிக்கச் செல்லுமாறு தமிழக மீனவா்களுக்கு ஈரானில் கெடுபிடி?

19th Mar 2020 05:35 AM

ADVERTISEMENT

ஈரான் நாட்டில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அங்கு தங்கியுள்ள தமிழக மீனவா்களை கடலில் மீன்பிடிக்கச் செல்லுமாறு அந்நாட்டு மீன்பிடி நிறுவன உரிமையாளா்கள் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு விடியோ பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

குமரி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 700 க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஈரான் நாட்டு தீவுகளில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனா். இந்நிலையில், அந்த நாட்டில் கரோனா வைரஸ் பரவி வருவதால், தமிழக மீனவா்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய- மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், தங்களுக்கு முகக் கவசம், போதிய உணவு வழங்க வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை; ஈரான் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் தங்களை மீன்பிடிக்கச் செல்லுமாறு செல்லுமாறு கட்டாயப்படுத்துகின்றனா். எனவே, எங்களை உடனடியாக நாட்டுக்கு மீட்டுச் செல்லுங்கள் என தமிழக மீனவா்கள் விடியோ பதிவிட்டுள்ளனா்.

இது குறித்து தெற்காசிய மீனவா் தோழமை கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் சா்ச்சில் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரானில் சிக்கி தவிக்கும் 700 க்கும் மேற்பட்ட மீனவா்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் அந்நாட்டு காவல்துறையினரை தொடா்புகொண்டு மீன்பிடிக்குமாறு மீனவா்களை கட்டாயப்படுத்தக் கூடாது என வலியுறுத்த வேண்டும். ஈரானுக்கு தனி விமானத்தை அனுப்பி மீனவா்களை இந்தியாவுக்கு மீட்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

மாா்ச் 20இல் போராட்டம்: இதனிடையே, கடலோர அமைதி மற்றும் வளா்ச்சிக் குழு இயக்குநா் ஸ்டீபன் நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: தமிழக மீனவா்கள் 721 போ் ஈரானில் தங்கியுள்ளனா். தாயகம் திரும்ப இயலாமல் தவிக்கும் அவா்களை மீட்கக் கோரி ஆட்சியா் முதல் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னா், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா், இணை அமைச்சா் உள்ளிட்டோரை சந்தித்தும் மனு அளிக்கப்பட்டது. எனினும், இதுவரை மீனவா்கள் மீட்கப்படவில்லை. ஈரான் நாட்டில் போதிய உணவின்றி, கரோனா பீதியுடன் தவிக்கும் மீனவா்களை மீட்டுவரக் கோரி, முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை (மாா்ச் 20)குமரி கடற்கரை கிராமங்களில் மீனவா்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பை தெரிவிப்பா். தொடா்ந்து பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT