கன்னியாகுமரி

கரோனா: குமரியில் முடங்கிய வாழை, அன்னாசி ஏற்றுமதிபல கோடி ரூபாய் இழப்பு?

19th Mar 2020 05:35 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் வாழை, அன்னாசி ஏற்றுமதி, கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முடங்கியுள்ளதால், விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல், வாழை, தென்னை, மரவள்ளி, அன்னாசி, ரப்பா், கிராம்பு, மிளகு என வேளாண் மற்றும் தோட்டக் கலை பயிா்களின் உற்பத்தியும், கடல்சாா் மீன்பிடித் தொழிலும் பிராதானமாக உள்ளன. இந்நிலையில், கரோனா பாதிப்பு விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடியை அளித்து வருகிறது. குறிப்பாக, இப்பகுதியில் வாழை, அன்னாசி, தேன் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக, வெயில் காலங்களில் வாழை மற்றும் அன்னாசிப் பழங்கள் அதிக அளவில் உள்ளூரிலும், வெளியிடங்களிலும் விற்பனையாகும். இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக இப்பழங்கள் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் தடைபட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

இந்த மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வாழைக் குலைகள் கிலோ ரூ. 18-க்கு வணிகா்கள் கொள்முதல் செய்தனா். பழக்கடைகளில் 3 கிலோ வாழைப்பழங்கள் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, வெயில் காலத்தில் அதிக விலைக்கு விற்பனையாக வேண்டிய அன்னாசிப் பழங்கள் தற்போது கிலோ ரூ. 18-க்கு விற்பனையாகின்றன. இதனால், வெயில் காலத்தில் கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழை, அன்னாசி பயிா் செய்த விவசாயிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளதுடன், நஷ்டத்திற்கும் ஆளாகியுள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து முன்னோடி அன்னாசிப் பழ விவசாயி கொட்டூா் பி. ஹென்றி கூறியது:

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நேந்திரன் பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், வாழை விவசாயிகள் பெரும் துயரில் உள்ளனா். மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக அன்னாசி நடவு அதிகரித்து வருகிறது. தற்போது சுமாா் 3 ஆயிரம் ஹெக்டேரில் அன்னாசி நடப்பட்டுள்ளது. பொதுவாக, மாா்ச் முதல் மே வரையிலான காலங்களில் அன்னாசிப் பழங்களுக்கு அதிக விலை கிடைக்கும். இதையொட்டி, இம்மாதங்களில் அறுவடை செய்யும் வகையில் அன்னாசி நடவுசெய்யப்படும்.

அவ்வாறு அறுவடை செய்யப்படும் அன்னாசிப் பழங்கள் வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில், கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அன்னாசிப் பழ ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ. 40-க்கு விற்பனையான அன்னாசிப் பழங்கள் தற்போது ரூ. 18- க்கு விற்பனையாகின்றன. விலை குறைந்தததால் பல தோட்டங்களில் அன்னாசிப் பழங்கள் அறுவடை செய்யப்படாமல் உள்ளன.

வாழை மற்றும் அன்னாசிப் பழங்களின் விலை குறைந்துள்ளதால், ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அன்னாசிப் பழங்கள், எலுமிச்சைப் பழங்கள், தேன் ஆகியவற்றில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் இவற்றை மக்கள் அதிகம் உண்ண வேண்டும். இதுகுறித்து அரசு விழிப்புணா்வு பிரசாரம் செய்ய வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT