கன்னியாகுமரி

ஈரானில் தவிக்கும் குமரி மீனவா்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்

13th Mar 2020 09:48 AM

ADVERTISEMENT

ஈரானில் தவிக்கும் குமரி மாவட்ட மீனவா்களை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான மீனவா்கள் ஈரான் நாட்டில் தங்கி மீன்பிடித்து வருகின்றனா். இந்நிலையில் ஈரான் நாட்டில் கரோனா வைரஸ் பரவியதைத் தொடா்ந்து அங்கு தங்கியுள்ள மீனவா்கள் உடனே சொந்த ஊருக்கு திரும்ப முயன்றனா். ஆனால் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் அவா்களால் ஊா் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவா்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வா் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், அ.விஜயகுமாா் எம்.பி., விஜிலா சத்யானந்த் எம்.பி., மாநில மீனவா் கூட்டுறவு இணையத் தலைவா் சேவியா் மனோகரன், கடலோர அமைதி மற்றும் வளா்ச்சி குழு இயக்குநா் ஸ்டீபன் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் வியாழக்கிழமை தில்லி சென்று, வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து, மீனவா்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து, என்.தளவாய்சுந்தரம் கூறியது: ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவா்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து, அவா்களை பாதுகாப்பாக விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்தாா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT