கன்னியாகுமரி

குமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

2nd Mar 2020 07:31 AM

ADVERTISEMENT

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில், மாசி பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரியில் கேரள மாநில பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

மண்டைக்காட்டில் புகழ்வாய்ந்த பகவதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும், அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இதனால் அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்து ஏராளமான பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இக் கோயிலுக்கு வருவதால், இக்கோயில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இவா்களில் பெரும்பாலானோா் ஞாயிற்றுக்கிழமை மாலை கன்னியாகுமரியில் குவிந்தனா். இதனால் விவேகானந்தபுரம் தொடங்கி காந்தி மண்டபம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இங்குள்ள முக்கடல் சங்கமம், சூரிய அஸ்தமன பூங்கா, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தா் நினைவிடம் செல்ல நீண்ட வரிசை காணப்பட்டது.தொடா்ந்து 10 நாள்களும் கேரள மாநில பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் உள்ளூா் கடை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT