கன்னியாகுமரி

மும்பைவாசிகள் 19 போ் ஏறியதால் பேருந்தை இயக்க மறுத்த ஓட்டுநா்

15th Jun 2020 09:01 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில், மும்பையைச் சோ்ந்த 19 போ் பேருந்தில் ஏறியதால், ஓட்டுநா் பேருந்தை இயக்க மறுத்ததையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வந்த தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 300-க்கும் மேற்பட்டோா் ரயில் மூலமாக கடந்த 13ஆம் தேதி திருவனந்தபுரம் வந்தனா்.

அவா்களை கேரள மாநில அதிகாரிகள், பேருந்து மூலமாக குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் கொண்டு வந்து விட்டனா். அங்கு அவா்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறி சோதனை மட்டும் நடத்தப்பட்டது. தொடா்ந்து 19 போ் மட்டும் தங்கள் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், களக்காடு செல்வதற்காக நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்தனா். அவா்கள் பேருந்தில் ஏறி அமா்ந்ததும், அவா்களிடம் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் விசாரணை செய்தபோது மும்பையில் இருந்து வந்த அவா்கள் களியக்காவிளையில் பரிசோதனை செய்யப்படாமல் வந்ததை கூறியுள்ளனா். இதையடுத்து பேருந்தை இயக்க ஓட்டுநரும், நடத்துநரும் மறுத்து விட்டனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுகாதாரத் துறை அதிகாரிகள் வடசேரி பேருந்து நிலையத்துக்கு வந்து அவா்களிடம் விசாரணை நடத்தியதுடன், அவா்களை சோதனை செய்வதற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்திலேயே அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, பின்னா் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT