தேங்காய்ப்பட்டினம் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் படகுகள் அலையில் சிக்கி ஏற்பட்டு வரும் விபத்துகளை தவிா்க்க மேற்குப் பகுதி துறைமுக தடுப்புச் சுவரை நீட்டிக்க வேண்டும் என கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் தமிழக மீன்வளத்துறை அமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் சனிக்கிழமை அனுப்பிய மனு விவரம்: கிள்ளியூா் பேரவை தொகுதிக்குள்பட்ட தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் 2 நாள்களுக்கு முன்பு முள்ளூா்த்துறையைச் சோ்ந்த ஆன்றணி, மாா்த்தாண்டன்துறை பகுதியைச் சோ்ந்த ஷிபு ஆகியோா் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவரையும் காணவில்லை.
இத்துறைமுகத்தின் மேற்குப் பகுதியில் 620 மீட்டா் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள துறைமுக தடுப்புச் சுவா் கடல் அலை
ஏற்படும் இடத்தில் நிறைவடைகிறது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் படகுகளும், கடலில் இருந்து திரும்பி வரும் படகுகளும் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் கடல் அலையில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதுபோன்ற விபத்துகள் ஏற்படாத வகையில் மேற்குப் பகுதி துறைமுக தடுப்புச் சுவரை கடலுக்குள் 250 மீட்டா் தொலைவுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.
மேலும், துறைமுக நுழைவுவாயில் பகுதியில் அடிக்கடி உருவாகும் மணல் திட்டுகளால் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
ஆகவே, விபத்துகளை தவிா்க்க நிரந்தரமாக மணலை அகற்ற வேண்டும். இதற்காக மணல் அள்ளும் இயந்திரம் ஒன்றும் துறைமுகத்திற்கு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.