கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் ராஜாக்கமங்கலம்துறை மற்றும் அழிக்கால் கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீா் புகுந்தது. இதனால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சீதோஷ்ணநிலை மாற்றமடைந்துள்ளது. இரவு நேரங்களில் கடல் காற்று வேகமாக வீசி வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை மாலையில் இருந்து கடல் சீற்றமாக காணப்பட்டது. ராஜாக்கமங்கலம்துறை, அழிக்கால், பிள்ளைதோப்பு கடற்கரை கிராமங்களில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. பல இடங்களில் கடல் நீா் குடியிருப்புக்குள் புகுந்தது.
அழிக்கால் கிராமத்தில் ஊருக்குள் புகுந்த கடல்நீரால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. கடற்கரையோரம் இருந்த மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை காலையும் ராஜாக்கமங்கலம், அழிக்கால் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடல் சீற்றத்தால் தெக்குறிச்சி பகுதியில் உள்ள கன்னிவிநாயகா் கோயிலின் மதில்சுவா் அரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுவா் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
ஊருக்குள் புகுந்த கடல்நீரால் அடித்துவரப்பட்ட மணல் வீடுகளுக்குள் குவிந்து கிடக்கிறது. இதை அகற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனா். இப்பகுதியில் கடல் நீா் ஊருக்குள் வராமல் தடுக்க கடற்கரையோரப் பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தகவலறிந்த சுரேஷ்ராஜன் எம்எல்ஏ ராஜாக்கமங்கலம்துறை, அழிக்கால் பகுதிகளுக்குச் சென்று கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைப் பாா்வையிட்டாா். மேலும், அங்கிருந்த மீனவ மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தாா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் கூறி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவா் உறுதியளித்தாா்.