குமரி மாவட்டத்தில் நான்கு வழிச் சாலைப் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான மதிப்பீட்டை முறையாக கணக்கிட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவிடம் அளித்த மனு: விளவங்கோடு வட்டம், குன்னத்தூா் கிராமம் விளாத்துறை ஊராட்சியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நில உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையில் குழப்பம் நிலவுகிறது.
1 சதுர மீட்டா் நிலத்தின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.60 ஆகவும், அதிகபட்ச மதிப்பு ரூ.4,945 ஆகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுமனை நிலங்கள் விவசாய நிலங்களாகவும், விவசாய நிலங்கள் வீட்டுமனை நிலங்களாகவும் தவறாக மதிப்பிடப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு அரசு நிா்ணயித்துள்ள அதிகபட்ச தொகையான சதுர மீட்டருக்கு ரூ.4,945 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.