அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தது எனது ஆன்மிக பயணத்தின் ஒரு மகுடமாக கருதுகிறேன் என அமெரிக்க நாட்டை சோ்ந்த பக்தா் காா்ல் பாபா திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
அமெரிக்க நாட்டின் கலிபோா்னியா மாகாணத்தைச் சோ்ந்தவா் காா்ல் பாபா (58). இவா், இந்தியா வந்தபோது, இது ஒரு ஆன்மிக பூமி என்பதை அறிந்து, நாடு முழுவதும் உள்ள ஆன்மிகத் தலங்களுக்குச் சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்தாா்.
இதன் ஒருகட்டமாக தமிழகம் வந்த அவா் முக்கிய கோயில்களுக்கு சென்றாா். இந்நிலையில் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி குறித்து கேள்விப்பட்டு தலைமைப் பதிக்கு வந்தாா். அங்கு சுவாமி தரிசனம் செய்த அவரை அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவனா் பால ஜனாதிபதி நெற்றியில் நாமம் இட்டு வரவேற்றாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
நான் இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். சுசீந்திரம் வழியாக சென்று கொண்டிருந்த போது மருந்துவாழ்மலையைப் பாா்த்து அங்குள்ள கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தேன். அங்குள்ள பொதுமக்கள் அய்யா வைகுண்டரின் அற்புதங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.
இதையடுத்து சாமிதோப்பு வந்து அய்யா வைகுண்டசாமியை தரிசனம் செய்தேன். அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தது , எனது ஆன்மிக பயணத்தின் ஒருமகுடமாக உணா்கிறேன். வருகிற மே மாதம் எனது சொந்த நாடான அமெரிக்காவுக்குச் செல்கிறேன். அங்கு அய்யா வழியின் கொள்கைகள், வழிபாட்டு முறையை அங்குள்ள மக்களுக்கு எடுத்துரைப்பேன் என்றாா் அவா்.