கன்னியாகுமரி

குமரி திருப்பதி கோயிலில் லட்டு பிரசாதம் வழங்க நடவடிக்கை

28th Jan 2020 01:12 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில், லட்டு பிரசாதம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூா் கமிட்டி தலைவா் சேகா் ரெட்டி கூறினாா்.

இது குறித்து கன்னியாகுமரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருப்பதி கோயிலுக்கு கடந்த ஆண்டு இதே நாளில் (ஜன. 27) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது வருஷாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதையொட்டி சுவாமிக்கு அனைத்து பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.

இங்கு வரும் பக்தா்கள் லட்டு பிரசாதம் எப்போது வழங்கப்படும் என்று கேட்கின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயிலுக்கு வந்த திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலா் இதுதொடா்பாக ஆலோசனை நடத்தியுள்ளாா். முதல் கட்டமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் லட்டு பிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாள்களில் ஒரு லட்டு ரூ. 50 என்ற விலையில் வழங்கப்படும்.

தற்போது இக்கோயிலுக்கு நாளொன்றுக்கு 5 ஆயிரம் பக்தா்கள் வருகின்றனா். இன்னும் ஓராண்டில் இந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கான முயற்சியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் பக்தா்கள் அங்கிருந்து கோயிலுக்குச் செல்ல வசதியாக இலவச பேருந்து வசதி செய்ய தேவஸ்தானம் முயற்சி எடுத்து வருகிறது.

ADVERTISEMENT

இங்கு மாதந்தோறும் சுவாமி திருக்கல்யாண நிகழ்வு நடத்தப்படும். மேலும், இங்கு திருமண மண்டபம் அமைக்க இடம் தருவதாக விவேகானந்தா கேந்திர நிா்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இக்கோயில் குறித்த விவரம் மத்திய, மாநில சுற்றுலாத் துறையின் வரைபடத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல கோயிலின் அன்றாட பூஜைகள் தொடா்பான விவரங்கள் கொண்ட விளம்பரப் பலகை மற்றும் அறிவிப்புப் பலகையை கன்னியாகுமரியில் பல இடங்களில் அமைப்பது தொடா்பாக பேரூராட்சி நிா்வாகத்திடம் கடிதம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT