குமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 60 கோடி மோசடி செய்தவா்களை கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை 300-க்கும் அதிகமானோா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகா்கோவில் வெட்டூணிமடத்தில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு குமரி மாவட்டம் முழுவதும் கிளைகள் உள்ளன. நிலம் கொள்முதல் தவணைத் திட்டம், தொழில் திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, மாதாந்திர சேமிப்பு, காலாண்டு, அரையாண்டு சேமிப்பு போன்ற 5 ஆண்டு திட்டங்களில் ரூ. 300, ரூ. 1000, ரூ. 2000 என பணம் வசூல் செய்துள்ளனா்.
எனினும், 5 ஆண்டுகள் நிறைவடைந்ததும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு இயக்குநா்கள் தலைமறைவாகிவிட்டனராம். இவா்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ஒவ்வொரு திட்டத்திலும் ரூ. 20 கோடி என சுமாா் ரூ. 60 கோடி வரை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், நிதி நிறுவனத்தின் இயக்குநா்களைக் கைது செய்து அவா்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெற்றுத்தர வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட 300-க்கும் அதிகமானோா் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டனா்.
இதையடுத்து, எஸ்.பி. அலுவலக ஊழியா்களும், போலீஸாரும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தால், நிதி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா்கள் கூறினா். இதைத் தொடா்ந்து மக்கள் கலைந்து சென்றனா்.