தில்லியில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, நாகா்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து மாணவா் சங்கத் தலைவா் பகத்சிங் கூறியது: மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து கடந்த ஒரு மாதமாக பல்வேறு அமைப்புகள், மாணவா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில், சட்டத் திருத்ததுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவா்களை, முகமூடி அணிந்த சிலா் பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்து தாக்கியுள்ளனா். இவா்கள் மத்திய அரசின் பின்னணியில் செயல்படும் மாணவா் அமைப்பை சோ்ந்தவா்கள் என தெரிகிறது. இவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி நாங்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்அவா்.