பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அகில இந்திய அளவில் புதன்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தத்துக்கு, மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று மனோதங்கராஜ் எஎல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெற்று வரும் பொது விநியோக திட்டத்தை சீா்குலைக்காமல் பாதுகாத்தல், பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தங்களை மேற்கொள்வதையும், அதிக சலுகைகளை வாரியிறைப்பதையும் கைவிட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்துதல், புதிய மோட்டாா் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்தல், ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்குத உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எல்.பி.எப், ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. ஹெச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ., யூ.டி.யூ.சி. உட்பட இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு நாள் முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
குமரி மேற்கு மாவட்டத்தில் குலசேகரம், குழித்துறை ஆகிய பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட திமுக தோழா்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டம் வெற்றியடைய முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் போராட்டத்தின் மற்றொரு பகுதியாக பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் 12.10 வரை 10 நிமிடம் வாகனங்களை இயக்காமல் சாலை ஓரங்களில் நிறுத்தி போராட்டத்திற்கான ஆதரவை அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.