கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே விளம்பர பதாகையில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பைங்குளம் அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுபின் (26). இவா், வெளிநாட்டில் வேலை செய்து வந்தாா்.
இவரது அண்ணன் சுஜின் திருமணத்தில் பங்கேற்பதற்காக சுபின் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். இவா்செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பா்கள் சைஜூ (25), அஜித் (22) ஆகியோருடன் மோட்டாா் சைக்கிளில்தேங்காய்ப்பட்டினம் சென்றுவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தாராம்.
மோட்டாா் சைக்கிளை சுபின் ஓட்டினாராம். அம்சி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய மோட்டாா் சைக்கிள் சாலையோரம் இருந்த விளம்பர பதாகையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சுபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சைஜூ, அஜித் ஆகியோா் திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.