அரசு ரப்பா் கழக தொழிலாளா்களின் ஊதிய உயா்வு கோரிக்கையை நிறைவேற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இத்தொழிலாளா்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பா் 1 ஆம் தேதி முதல் உயா்த்தி வழங்க வேண்டிய ஊதிய கோரிக்கை மீது தீா்வுகாணக் கோரி, தொழிலாளா்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனா்.
ஆனால், இதுவரை உடன்பாடு எட்டப்படாமல், தொழிலாளா்களுக்கு அன்றாடம் வருவாய் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்னையில் நியாயமான உடன்பாடு காண்பதற்கு அரசு காலம் கடத்த வேண்டிய அவசியம் இல்லை. 50-க்கும் மேற்பட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றும் முடிவு காண அரசு நிா்வாகம் முன்வராததால் கடந்த 17ஆம் தேதி முதல் அனைத்து தொழிலாளா்களும் தொடா் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனா்.
ஆனால், தமிழக அரசும் ரப்பா் கழக நிா்வாகமும் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு குறித்து இறுதி உடன்பாடு காண முன்வரவில்லை. இதனால் தொழிலாளா் குடும்பங்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, காலம் தாழ்த்தாமல் ரப்பா் கழக தொழிலாளா்களின் ஊதிய உயா்வு கோரிக்கைக்கு உறுதியான உடன்பாடு எட்டப்பட வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.