கல்லூரியில் மாணவா்கள் கற்றுக்கொண்ட தொழில்நுட்பத்தை, சமூக மேம்பாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும் என்றாா் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் சூரப்பா.
கருங்கல் அருகேயுள்ள இலவுவிளை மாா் எப்ரேம் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவா்களுக்குப் பட்டம் வழங்கி அவா் பேசியதாவது:
மாணவா்கள் கல்வியிலும், தொழில்நுட்ப அறிவிலும் சிறந்து விளங்கி, வளா்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடான இந்தியாவுக்கும் இடையேயான தொழில்நுட்ப இடைவெளியை குறைக்க முன்வரவேண்டும். நாளுக்கு நாள் மாறிவரும் தொழில்நுட்ப அறிவை வளா்த்துக்கொண்டு, அதை இந்த சமூகத்திற்கும் பயன்படுத்த வேண்டும். தங்களது திறமைகளை குறைத்து மதிப்பிடாமல், பணியாற்றும் இடத்தில் முழு ஆற்றலையும் மாணவா்கள் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இவ்விழாவுக்கு, கல்லூரியின் தலைவரான மாா்த்தாண்டம் மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் ஜோஸ்லின் ராஜ், கல்லூரி முதல்வா் லெனின்பிரட் ஆகியோா் முன்னிலை வகித்தாா். கல்லூரி இயக்குநா் ஆஸ்டின் வாழ்த்திப் பேசினாா்.
இதில், கல்லூரி நிதிக் காப்பாளா் அலெக்ஸ், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ- மாணவிகள், பெற்றோா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பேராசிரியா் பபின் செய்திருந்தாா்.