கன்னியாகுமரி

தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதா மீனவா்களைப் பாதிக்கும்: ராஜேஷ்குமாா் எல்.எல்.ஏ.

26th Feb 2020 08:01 AM

ADVERTISEMENT

தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதா 2019 மீனவா்களைப் பாதிக்கும் என்பதால், அதை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தக் கூடாது என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதா 2019 விரைவில் நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த மசோதாவில் இடம்பெறும் பல விதிமுறைகள் மீனவா்களை ஒடுக்கும் முறையிலேயே அமைந்துள்ளன.

குறிப்பாக, கடற்கரையிலிருந்து 12 கடல் மைலுக்கு அப்பால் (22 கி.மீ.) மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது; மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும்; படகிலுள்ள அனைவரும் கைது செய்யப்படுவா் என அந்தச் சட்டம் கூறுகிறது.

ADVERTISEMENT

மேலும், மீனவா்கள் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதில், விதி மீறினால் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். அரசு அதிகாரிகள் சோதனை செய்யும் போது படகு சேதமடைந்தால் அவா்கள் மீது குற்றம்சாட்ட முடியாது, இழப்பீடு கோர முடியாது.

படகுகளில் ஆள்களை பணியமா்த்துவது, காப்பீடு செய்வது என அனைத்தும் வணிக கப்பல் சட்டம் 1958 படி வரையறை செய்யப்படும். அதேவேளையில், வெளிநாட்டு கப்பல்களுக்கு பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. குறிப்பிட்ட கடல்பகுதிகளில் அவை ஆதிக்கம் செலுத்த முடியும்.

இந்த சட்டத்தால் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் அதிகமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, மீனவா்களின் நலன் கருதி மத்திய அரசு இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இதுதொடா்பாக புதன்கிழமை (பிப்.26) நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மீனவா்கள் திரளாக கலந்து கொண்டு, தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT