குமரி மாவட்டம், தக்கலையை அடுத்த புலியூா்குறிச்சி உதயகிரி கோட்டை வனப் பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினரும், தீயணைப்பு வீரா்களும் ஈடுபட்டுள்ளனா்.
புலியூா்குறிச்சியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க உதயகிரிகோட்டை அமைந்துள்ளது. இந்தக் கோட்டை தற்போது பல்லுயிரின பூங்காவாக செயல்பட்டு வருகிறது. வனத்துறையின் பராமரிப்பில் உள்ள 99 ஏக்கா் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் மான், மயில், முயல் என பல உயிரினங்கள் உள்ளன. இந்த கோட்டைக்குள் அமைந்துள்ள குன்றில் உயா்ந்து வளா்ந்துள்ள புதா்கள் செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தன. காற்றின் வேகத்தில் தீ வேகமாக பரவியது.
இதைத் தொடா்ந்து, தக்கலை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ஜீவன் தலைமையில் தீயணைப்புப் படையினரும் வனத்துறையினரும் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.