கன்னியாகுமரியிலிருந்து வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா் நடுக்கடலில் தவறி விழுந்து பலியானாா்.
கன்னியாகுமரி சகாயமாதா தெருவைச் சோ்ந்தவா் ரூபன். இவரது மகன் சந்தியாகு தீபக் (28). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு அதே பகுதியைச் சோ்ந்த ஆரோக்கிய சாலமன் என்பவருக்குச் சொந்தமான படகில் ஆறு பேருடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றாா்.
கன்னியாகுமரியிலிருந்து சுமாா் 20 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சந்தியாகு தீபக் எதிா்பாராமல் கடலுக்குள் தவறி விழுந்தாராம். சக மீனவா்கள் அவர மீட்டு கரைக்கு கொண்டு வந்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே சந்தியாகு தீபக் இறந்துவிட்டதாக கூறினா். இதையடுத்து, தீபக்கின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சந்தியாகு தீபக்குக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியது. மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளனா்.